Friday, April 19, 2019

அசோகமித்திரன குறுங்கதைகள்

Ashokamithiran Short Stories



நூல் குறிப்பு:

கடந்துவிட்ட காலத்தை எளிய நடுத்தர வர்க்க வாழ்க்கையின் வழியாகச் சித்திரிப்பது அசோகமித்திரன் கதைகளின் பொதுவான அம்சம். இக்குறுநாவல்களிலும் எளிய மனிதர்களின் வாழ்க்கையையே சாரமாக எடுத்திருக்கிறார் அசோகமித்திரன்.

அவரது கதை மாந்தர்களைப்போல் அவரது மொழியும் அலங்காரமற்றது; ஆனால் பிரகாசமும் நுட்பமும் கொண்டது. ஒரு கதையை, அரசியலை, வாழ்க்கையைச் சொல்லும்போது சாமானியனின் குரலையே விவரிப்பு மொழியாகத் தேர்ந்தெடுக்கிறார். அசோகமித்திரனுக்குத் தீர்க்கமான அரசியல் பிடிபாடுகள் உண்டு; அவரது கதை மாந்தர்களும் அதைப் பேசுகிறார்கள். ஆனால் நடுத்தர வர்க்கத்தினரின் அன்றாடத்தில் அரசியல் நிகழ்த்தக்கூடிய பாதிப்பாகவே கதை மாந்தர்களுக்கு இடையில் அது பகிரப்படுகிறது.

பெருநகரக் குடித்தன வீட்டின் பகலிருட்டைப் போன்ற துயரம் அசோகமித்திரன் கதைகளில் கவிகிறது. நடுத்தர வர்க்கத்தினரின் விழுமியங்களுக்கும் மற்ற இரு பிரிவினரின் வாழ்க்கை முறைகளுக்கும் இடையிலான முரண்களையும் அவரது கதைகள் சித்திரிக்கின்றன. இந்த முரண்களால்  எழும் சாமானியனின் தாழ்வுமனப்பான்மையையும் கையாலாகாத்தனத்தையும் பகடியாகக் கடக்கிறார்.

இது அசோகமித்திரன் மொழியின் விஷேசமான பண்பு. ஒரு நாளைப்போல் மாறாத மற்றொரு நாளுக்காகக் காத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் பாடுகள்தாம் அசோகமித்திரனின் இந்தக் குறுநாவல்கள்.
ஈழம் இன்று - திருமாவேலன்
Izham Inru - Thirumavelan



நூல் குறிப்பு:

ஆதியோடு அந்தமாக ஈழத்து தமிழ் மக்களின் உரிமைப் பிரச்னைகளும், சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மக்களின் உணர்வுகளும், போராளிகளின் வாழ்க்கையும் ஆனந்த விகடன் இதழ்களில் கட்டுரைகளாக வெளிவந்து, உண்மை நிலையை உலகறியச் செய்தது!
லட்சக்கணக்கான மக்கள் சொந்த மண்ணில் வாழ்வுரிமைக்காகப் போராடி, உயிரிழந்த கொடுமைகளைப் பார்த்து இந்த உலகம் வேதனைப் பெருக்கோடு கண்ணீர் சிந்திக்கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ சமாதான முயற்சிகள் தோல்வியடைந்தன. இதையெல்லாம் மீறி இலங்கை அரசாங்கம் செய்தது என்ன?
சிங்கள ராணுவம் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீது ஏற்படுத்திய நெருக்கடிகள்தான் அவர்களைப் போராளிகளாக உருவாக்கியது என்பதைச் சுட்டிக்காட்டி, குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள் எனத் தெளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் திருமாவேலன்.
தன்மானத்தை மட்டுமே தன்னுடன் வைத்துக் கொண்டு தனி ஈழம் கேட்டு போராடிய தலைவர்களுடன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு இணைப்பு உண்டானது எப்படி? பிரபாகரன் உள்ளிட்ட இளைஞர் படை ஆயுதம் ஏந்திய போராளிகளாக உருவெடுப்பதற்கான திருப்புமுனைச் சம்பவம் என்ன?

உலகம் கைகட்டி வேடிக்கை பார்க்க, உறவுச் சொந்தங்கள் வெறும் கையைப் பிசைந்து
நிற்க, ஈழத்தில் அரங்கேறிய கொடூரங்களை உங்களது மனச்சாட்சிக்கு அருகே கொண்டு
வந்து நிறுத்தும் காரியத்தைச் செய்திருக்கிறது இந்தப் புத்தகம்.
முதல் முப்பதாண்டுகள் அகிம்சை ஆர்ப்பாட்டங்களாலும், அடுத்த முப்பதாண்டுகள் ஆயுத
ஆர்ப்பரிப்புகளாலும் உச்சரிக்கப்பட்ட ஈழத் தமிழர் உரிமை, இன்னமும் கேட்பாரற்ற
அநாதையாகவே கிடக்கிறது. கண்களில் வழியும் நீரைத் துடைக்கவும், ஆதரவுக்கரம்
இன்றி அல்லலுறும் மக்களுக்காக பரிந்து பேசுவதற்குமான முயற்சியே இந்தப் புத்தகம்.
வரலாற்றுப் புத்தகங்களில் கண்ணீரால் மட்டுமே எழுதப்படும் ஒரு இனத்தின் கதை இது!

அனைவருக்கும் வணக்கம்...        ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள் சில தற்போது இல்லை என வருகிறது என தெரியவருகிறது. தாங்கள் விரும்பும் பு...