சைவ, வைணவ, துவைத புத்தகங்கள் - Saiva vainava thuvaitha Books
நூல் குறிப்பு:
சைவ சமயத்தின் பழைய வரலாறுகள் நன்கு அறியப்படாமையால் அவை பழங்கதை வடிவில் இருந்து வருகின்றன.
சிவ வழிபாடு இந்திய நாட்டில் காணப்படுவது போலவே இந்திய நாடல்லாத பிற நாடுகளிலுமிருந்ததென்பது அண்மை வரையில் அறியப்படவில்லை. மேல் நாட்டினரின் தொல் பொருள் ஆராய்ச்சிகளால் பாம்பு வணக்கம், இலிங்க வணக்கம், சிவ வணக்கம், காளி வணக்கம் என்பன பிற நாடு களுக்கும் உரியனவாயிருந்தனவென்பதை அறிகின்றோம்.
இதற்கு ஆதாரமாகக் கிடைத்துள்ள சான்றுகளையும், சாங்கியம், யோகம், பூர்வமீமாம்சை, உத்தரமீமாம்சை, வைசேடிகம், வேதாந்தம், சைவசித்தாந்தம் முதலிய தத்துவ ஞானங்களின் வரலாறுகளையும் இங்கு சுருக்கமாகக் கூறியுள்ளோம்.
இந்நூல் புராணமுறையில் இருந்து வரும் சமயவரலாற்றுக்குப் பல வகையில் விளக்க மளிப்பதாக இருக்கும்.
நூல் குறிப்பு: 2
ஸ்ரீ வைஷ்ணவம் என்பது ஏதோ ஒரு இனத்தாருக்கு மாத்திரமே உரியதாக எண்ணப்படுகிறது. அது அப்படியில்லை. எல்லோருமே ஸ்ரீ வைஷ்ணவனாகப் பிறப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் இவ்வுலகில் பிறந்த அத்தனை ஜீவன்களும் ஸ்ரீ வைஷ்ணவன் ஆகலாம் என சிவப்புக் கம்பளம் விரிக்கும் மதம் ஸ்ரீ வைஷ்ணவம்.
வேதகாலத்தில் இருந்து வைஷ்ணவம் தோன்றியது. தமிழ் இலக்கியங்கள் அதனைப் போற்றியது, வாழ்க்கையோடு வைஷ்ணவம் எப்படியெல்லாம் கலந்துள்ளது என்பது தொடங்கி, அதன் தத்துவங்கள், சித்தாந்தங்கள், பெருமாளின் கல்யாண குணங்கள், சரணாகதி தத்துவம், வடகலை தென்கலை வித்தியாசங்கள் ராமானுஜர் ஏற்படுத்திய மாற்றங்கள் என சகலமும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
கூடவே வைஷ்ணவத்தை முன்னெடுத்துச் சென்ற ஆழ்வார்கள், அவர்களுக்குப் பின் வைணவத்தை வளர்த்த ஆச்சாரியார்களைப் பற்றியும் சிலிர்ப்பூட்டும் நடையில் அழகு தமிழில் எழுதியுள்ள இந்நூலாசிரியர் கல்பாக்கம் அணுவாற்றல் மருத்துவமனையில் பணியாற்றுபவர். பக்தி இலக்கியம் தவிர குழந்தை இலக்கியத்திலும் பல பரிசுகளைப் பெற்றவர். பிரமிப்பூட்டும் தகவல்கள் கொண்ட இந்த ஸ்ரீ வைஷ்ணவம் உங்களை வசப்படுத்துவது நிச்சயம்.
நூல் குறிப்பு: 3
மாத்வ சமூகம் இந்து மதத்தில் ஒரு சிறுபான்மைச் சமூகம். அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் வசிக்கும் மாத்வர்கள் (குறிப்பாக கன்னட மற்றும் சமஸ்கிருத மொழியில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்) பலரும் தாங்கள் பின்பற்றும் சித்தாந்தத்தைப்பற்றி தெளிவாக அறியாதவர்களாக, ஆனால் அறிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆவல் நிரம்பப் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
இதுவரை கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ள பல புத்தகங்கள் துவைத சித்தாந்தத்தை மிகவும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளன. ஆனால், ‘துவைதம்’ குறித்த விரிவான விளக்கங்களுடன் தமிழ் மொழியில் புத்தகம் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் வாழும் சாதாரணமான பாமர மாத்வர்களும் மேற்படி விஷயத்தைத் தெள்ளத் தெளிவாக தெரிந்துகொள்வதற்காக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
மாபெரும் சமுத்திரமான துவைதத்தின் சித்தாந்தக் கருத்துகளை எளிதாக சுருக்கமாக எடுத்துச் சொல்வதுடன், துவைத சித்தாந்தம் என்பது என்ன? துவைதம் உருவானதற்கான காரணங்கள் என்னென்ன? அத்வைத, விசிஷ்டாத்வைத சித்தாந்தங்கள் என்ன சொல்கின்றன என்பது பற்றியெல்லாம் விவரிக்கும் இந்நூல் கூடவே துவைதத்தை நிறுவிய மகான் மத்வாச்சாரியார் வரலாறுடன், அவருக்குப் பின் வந்த மத்வ மகா புருஷர்களது சிறப்பையும் விளக்கிக் கூறுகிறது.
மாத்வத்தை அறிந்துகொள்ள விரும்புவோருக்கு இந்த நூல் ஒரு சிறிய திறவுகோலாக அமையும் என்பது நிச்சயம்.